கும்பம்: தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், பிரச்சினைகளின் ஆணி வேரை கண்டறிந்து அகற்றிவதில் வல்லவர்கள். உங்கள் ராசிக்கு, (திருக்கணிதப்படி) மே 14 முதல் 5-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப் போகிறார் குருபகவான். இதுவரை 6-ல் அமர்ந்து, பல சிரமங்களை அனுபவிக்க வைத்த குருபகவான், இனி பல்வேறு யோகங்களை அருளப் போகிறார். மன நிலை, குணநிலை, உடல்நிலை அனைத்து வகையிலும் சந்தோஷம் உண்டு. பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டு. சொல்வாக்கு கூடும்.
சொத்துப் பிரச்சினையில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைகள் நீங்கி, மகளின் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெறும். அடகிலிருந்த வீட்டுப் பத்திரங்களை மீட்டெடுப்பீர்கள். இனி, உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். குலதெய்வம் கோயிலுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
குரு பகவானின் பார்வை பலன்கள்: குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், புது உத்வேகம் பிறக்கும். விஐபிகளின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். தோற்றப் பொலிவு கூடும். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தை குரு பார்ப்பதால், தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவர் வழிச் சொத்துகள் கைக்கு வரும். இதுவரை வறண்டு கிடந்த பணப்பை, இனி நிரம்பும். சேமிக்கும் அளவுக்கு பொருள் வரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
லாபஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், தொழில்-வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். புது முதலீடுகள் செய்வீர்கள். புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப் புடவை, தங்க ஆபரணம் வாங்கிக் கொடுப்பீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள். உங்கள் மீது இருந்த வீண் பழியும் அகலும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களுடைய தைரியஸ்தானத்துக்கு அதிபதியும் ஜீவனஸ்தானத்துக்கு அதிபதியுமான செவ்வாய் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் பயணிப்பதால் எல்லா வகையிலும் உங்களுக்கு வெற்றி உண்டு. எதிர்ப்புகள் எல்லாம் விலகும். நெடுங்காலமாக நடந்து வந்த சொத்து வழக்குகள் சாதகமாகும். விஐபிகள் அறிமுகமாவர்கள். விலை உயர்ந்த பொருள்கள், நகைகள் வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குருபகவான் பயணிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். விலகிப் போனவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். எதிர்ப்புகள் விலகும். நம்பிக் கொடுத்த பணம் வரவில்லை என்று நீங்கள் வருந்திய நிலை மாறி இனி அந்தப் பணம் திரும்பி வரும். கௌரவ பதவிகள் கிடைக்கும்.
உங்களுடைய தன, லாபாதிபதியான குரு பகவான் தன்னுடைய நட்சத்திரத்தில் 13.8.25 முதல் 01.6.26 வரை பயணிப்பதால் திடீர் பணம் வரும். செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த சொத்துகள், நகைகள் வாங்குவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் ஏமாற்றம், மனக்கவலைகள் வந்து போகும். வழக்கு சம்பந்தபட்ட விஷயங்களில் அவசரம் காட்டாதீர்கள். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறையுங்கள். யோகா, தியானம் என்று மனதை செலுத்துங்கள்.
வியாபாரத்தில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள், கணினி, உணவு, என்டர்பிரைசஸ், கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்தியோகத்தில் உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள், இனி நட்புறவாடு வார்கள். வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடன் இருந்த பனிப்போர் நீங்கும். திடீரென்று ஊதியம் உயரும். தலைமையிடத்தின் பார்வை உங்கள் மீது படும். கணினித்துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். புதிய புராஜெக்டுக்கு தலைமையேற்கும் நிலை உருவாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கலைஞர்களுக்கு, அரசாங்கப் பரிசு கிடைக்கும்.
இந்த குரு பெயர்ச்சி லட்சியப் பாதையை நோக்கி பயணிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: சென்னை பாடியில் அமைந்துள்ள திருவலிதாயத்தில் வீராசன கோலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். தந்தையை இழந்த பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். சகல செல்வங்களும் கிடைக்கும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |